மன அழுத்தத்திற்கு தீர்வு என்ன?



மனது சரியானால் நோய்கள் குணமாகும்..

டாக்டர்களை சந்திக்க இப்போது நிறைய பேர் பெரிய பைல்களுடன் வருகிறார்கள்.  பைல்களில், அவர்களை உச்சி முதல் பாதம் வரை பரிசோதனை செய்த குறிப்புகளும், பல்வேறு நோய் அறிகுறிகளுக்காக அவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளின் பட்டியலும் இடம் பெற்று இருக்கிறது.  பைலின் அளவு போன்று தங்களுக்கு பல்வேறு நோய்கள் இருக்குமோ என்று நினைத்து பலரும் கவலைப்படுகிறார்கள்.

அவர்கள் கொண்டு வரும் பைலை வாங்கி சற்று ஓரமாக வைத்துவிட்டு 10 நிமிடங்கள் அவர்கள் மனம் விட்டு பேசும் சூழ்நிலையை உருவாக்கினால், பெரும்பாலும் பைலை பார்க்காமலே அவர்களது நோய் அறிகுறிக்கான காரணத்தை கண்டறிந்து விட முடிகிறது. பெரும்பாலானவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்க்கு மன அழுத்தமே காரணமாக இருக்கிறது. மனப்பிரச்சனை தீரும் போதுஉடல்நலத்துக்காக கொடுக்கப்படும் மருந்துகளும் முழுமையாக வேலை செய்கிறது. விரைவாக அவர்களால் நிவாரணம் பெற்றுவிட முடிகிறது.

இன்று ஒவ்வொரு குழந்தையும் மன அழுத்தத்தோடு தான் பிறக்கிறது. தொட்டில் பருவத்தில் இருந்து சுடுகாடு செல்லும்வரை அதன் தாக்கம் ஏதாவது ஒரு வகையில் எல்லா மனிதர்களிடமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.  அதில் சிக்காமல் வாழ்வது சிரமம். ஆனால் அதை எதிர்கொண்டு சமாளித்து, அதிலிருந்து விடுபட எல்லோராலும் முடியும்.



சரி.. மன அழுத்தம் உருவாக என்ன காரணம்?

எதிர்பார்ப்பிற்கும் -  யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளிதான் மன அழுத்தத்திற்கு காரணம்.  இந்த இடைவெளி அதிகரித்தால், மன அழுத்தமும் அதிகரிக்கும். உதாரணம் சொல்கிறேன்.  நமது குழந்தைக்கு ஏதாவது ஒரு பள்ளியில் படிக்க இடம் கிடைக்கும். எங்கு எங்கு கிடைத்தாலும் குழந்தை அங்கு சேர்ந்து முடிந்த அளவு படிக்கும் என்ற அளவுக்கு பெற்றோரின் எண்ணம் இருந்தால், ‘ அட்மிஷன்’  எந்த பள்ளியில் கிடைத்தாலும் அவர்கள் மனம் அதை ஏற்றுக்கொள்ளும். அப்போது அவர்களது எதிர்பார்ப்பிற்கும் - யதார்த்தத்திற்கும் இடைவெளி இல்லை. அதனால் குழந்தையின் அட்மிஷன் விஷயத்தில் அந்த பெற்றோருக்கு மன அழுத்தம் தோன்றாது.

அதற்கு மாறாக,  பிரபலமான பள்ளி ஒன்றில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை  உருவாக்கிக்கொண்டு அது நடக்காமல் போகும் போது அங்கே எதிர்பார்ப்பிற்கும் -  யதார்த்தத்திற்கும் இடைவெளி தோன்றி, அது அந்த பெற்றோருக்கு மன அழுத்தத்தை கொடுக்கும்.  நமக்கு மன அழுத்தம் உருவாக யாரோ, எதுவோ காரணம் இல்லை. நாம் தான் காரணம். நாம் யதார்த்தத்திற்கு தக்கபடியான எதிர்பார்ப்புகளை உருவாக்கிக்கொண்டால்,  மன அழுத்தம் இன்றி நிம்மதியாக வாழலாம்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இரண்டு விதமான மனிதர்களை சந்தித்திருப்பீர்கள்.  ஒரே மாதிரியான சோகம், வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழும் இரண்டு மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஒருவர் அதை தாங்கிக் கொள்ளும் சக்தியை பெற்று இருப்பார். இன்னொருவர் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து போய் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பார்.

ஒரே மாதிரியான சம்பவம் தானே!  ஏன் ஒரு மனிதரால் அதை தாங்கிக்கொள்ள முடிகிறது?  இன்னொரு மனிதனால் அதை ஏன் தாங்கிக்கொள்ள முடியவில்லை?  இதுபற்றி சர்வதேச அளவில் ஆய்வு ஒன்று நடந்தது அதில்,’ ஒரு  மனிதரின் மனோபலத்தை அவரது பாரம்பரியம் 50% அளவுக்கு தீர்மானிக்கிறது.  வளரும் சூழல், சமூகம், கலாச்சாரம், நண்பர்கள், வளர்ப்பு முறை, கல்வி போன்றவை இன்னொரு 50% தீர்மானிக்கிறது’  என்று கண்டறிந்தார்கள். இதை வைத்து பார்க்கும்போது பாரம்பரியத்தில் இருந்து என்ன கிடைத்தாலும் அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் . ஆனால் வளர்ப்பு முறை, வளரும் சூழல், நண்பர்கள், கலாச்சாரம், கல்வி போன்றவைகளால் பெறும் மனோபல அளவை நம்மால் அதிகரித்துக் கொள்ள முடியும். அதன்மூலம் மன அழுத்தம் இன்றி வாழவும் முடியும்.

காலையில் நீங்கள் விழிக்கிறீர்கள்.  படுக்கையிலிருந்து நீங்கள் கண்களை திறக்கும்போதே மிக உஷாராக இருக்க வேண்டும். நான்கு முனை தாக்குதல் போன்று, நாலாபுறமும் இருந்தும் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் உங்களை நோக்கி ஏவப்பட்டு கொண்டிருக்கும்.  வீட்டில் இருந்தும் , பக்கத்து வீட்டில் இருந்தும், டெலிவிஷன் வழியாகும், செல்போன் வழியாகவும் நீங்கள் பார்ப்பதும் - கேட்பதும் உங்களை விடாமல் துரத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கும். நீங்கள்  இரண்டு காதுகள் இருக்கிறதே என்று எல்லாவற்றையும் கேட்க முன்வந்தால், இரண்டு கண்கள் இருக்கிறதே என்று எல்லாவற்றையும் பார்க்க முன் வந்தால், உங்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டு மன அழுத்தம் உருவாகிவிடும். இதிலிருந்து தப்பிக்க எதை பார்ப்பது,  எதைக் கேட்பது, எதைப் பேசுவது என்று சிந்தித்து முடிவெடுத்து உங்களுக்கு நீங்களே கடிவாளம் போட்டுக்கொள்ள வேண்டும்.

சோசியல் மீடியாக்கள் இப்போது தனிமனிதர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கின்றன. சைபர் கிரரைம்களும், நிச்சயமற்ற அரசியல் சூழல்களும், இயற்கை இடர்பாடுகளும்கூட மன அழுத்தத்தை உருவாக்குவதில் பங்கு வகிக்கிறது.

ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படும் போது அவரது முடிவெடுக்கும் திறன் குறையும்.  அவர் மனதை ஒரு நிலைப் படுத்த முடியாமல் தடுமாறுவார். அவரது செயல்பாட்டு திறன் குறையும். நினைவாற்றல், தூக்கம், நிம்மதி, வேலை ஈடுபாடு போன்றவை குறைந்து போகும். அத்தோடு மன அழுத்தத்தால் பல்வேறு நோய்களும் தோன்றும்.  குறிப்பாக ஜீரண மண்டல நோய்கள் தாக்கும். வயிற்று தொந்தரவுகள், அசிடிட்டி பிரச்சனை, ஜீரண கோளாறு, நரம்பு மண்டல பாதிப்பு போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை.  அளவுக்கு மீறி வியர்த்தல், பதற்றம் உருவாகுதல், உயர் ரத்த அழுத்தம் தோன்றுதல் போன்றவைகளும் உருவாகும். ‘ செர்விகல் ஸ்பான்டிலோசிஸ்’ எனப்படும் கழுத்து தொடர்புடைய பாதிப்புக்கு நிறைய பேர் கழுத்தில் ‘செர்விகல் காளர்’ பொருத்தியிருக்கிறார்கள்.  இந்த பாதிப்பிற்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது. மன அழுத்தத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதில் இருந்து மீண்டால்தான், இந்த நோய்க்கு தரப்படும் மருந்தும், பயிற்சிகளும் முழுமையாக பலன் தரும்.

மன அழுத்தத்திற்கு சரியான முறையில்,  சரியான நேரத்தில் தீர்வுகண்டு அதை கட்டுப்படுத்தாவிட்டால் அது தற்கொலை சிந்தனையை உருவாக்கிவிடுகிறது.  இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதில் 8 முதல் 10 ஆயிரம் பேர் வரை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  கேரளாவும், தமிழ்நாடும் இதில் முன்னிலை வகிக்கிறது. தற்கொலை செய்து கொள்பவர்களில் ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள். வேலை இன்மை, உறவுச் சிக்கல், தொடர் தோல்விகள், மனம் விட்டுப் பேச நண்பர்கள் இல்லாமை,  குடும்பத்தினரின் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளை ஈடு செய்ய முடியாமை போன்ற பல காரணங்கள் ஆண்களின் தற்கொலை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.



மன அழுத்தத்திற்கு தீர்வு என்ன?

பண்பாடு,  கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு அதை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.  நீதிக் கதைகளையும், போதனைகளையும் கேட்டு, ஆசைகளையும் - எதிர்பார்ப்புகளையும் குறைத்துக்கொண்டு ஒழுக்கத்தோடு வாழ முன்வர வேண்டும்.

மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக  மட்டும் குழந்தைகளை நினைத்தால், பெற்றோர்களால் அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகுவார்கள். மதிப்பெண்ணுக்கு அப்பால் குழந்தைகளின் தனித்திறன்களை பெற்றோர் மேம்படுத்த வேண்டும்.

மைதானங்களில் விளையாடும் விளையாட்டுக்கள் உடலுக்கும் மனதுக்கும் நலம் தரும்.  வெற்றி, தோல்வியை சமமாக பாவிக்கும் ‘ ஸ்போர்டிவ் ஸ்பிரிட்’ ஆற்றலையும் அது வளர்க்கும். அதன்மூலம் தோல்வியால் துவண்டு போகாமலும், மன அழுத்தம் ஏற்படாமலும் பாதுகாக்கும்.

முறையான உணவு பழக்கத்தை மேற்கொள்ளுதல்,  உடற்பயிற்சி செய்தல், மது மற்றும் புகை பிடிக்காமல் இருத்தல்,  உடல் எடையைக் கட்டுக்குள் வைத்தல், வாழ்க்கை முறையில் இருக்கும் முரண்பாடுகளை களைதல்  போன்றவைகளும் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க துணை புரியும்.

ஒருவரது வெற்றியை மட்டும்  பார்த்துவிட்டு தானும் அதனை எளிதாக பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள், தோல்விகள், முயற்சிகளை எல்லாம் கருத்தில் கொண்டு உழைக்கவும், காத்திருக்கவும்,  போராடி வெற்றி பெறவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க கடவுள் பக்தியும் கைகொடுக்கும். வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படும்போது, ‘ அதில் இருந்து புதிய அனுபவங்களை கற்றுக்கொள்வதற்கானவாய்ப்பை கடவுள் உருவாக்கித் தந்திருக்கிறார்’  என்று நினைத்து மனதை அமைத்துக்கொண்டு.’ கடமையை செய்.. பிரதிபலனை கடவுள் தருவார்’ என்ற நம்பிக்கையோடு வாழ முன்வர வேண்டும்.
மன அழுத்தத்திற்கு தீர்வு என்ன? மன அழுத்தத்திற்கு தீர்வு என்ன? Reviewed by Unknown on 20:26 Rating: 5

No comments:

Powered by Blogger.