அட்லி டைரக்சனில், மீண்டும் விஜய்!
‘ சர்க்கார்’ படத்தை அடுத்து விஜய், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அட்லீ டைரக்டு செய்கிறார்.
எங்கேயும் காதல், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், திருட்டுப் பயலே, அனேகன், கவண், தனி ஒருவன் உள்பட பல படங்களை தயாரித்த நிறுவனம், ஏஜிஎஸ். இந்த நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி அகோரம் மிக பிரமாண்டமான முறையில் ஒரு புதிய படம் தயாரிக்கிறார். இதில், விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ டைரக்ட் செய்கிறார். விஜய் அட்லீ இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரிய இருக்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் டிசம்பரில் தொடங்குகிறது.
“ இதுவரை தமிழ் திரையுலகில் வந்திராத கதை, இது. விஜய் இதுவரை நடித்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்” என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.
‘தில்லுக்கு துட்டு-2ம் பாகத்தில் பேய் வேடத்தில், ஷிர்த்தா சிவதாஸ்!
2016-ம் ஆண்டில், சந்தானம் நகைச்சுவை நாயகனாக நடித்து வெளிவந்த படம், ‘ தில்லுக்கு துட்டு.’ இதில், ஏஞ்சல் சிங் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனந்தராஜ், கருணாஸ், ‘ நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி மற்றும் பலரும் நடித்திருந்தார்கள். இந்தப் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம், ‘ தில்லுக்கு துட்டு-2’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.
இதிலும் சந்தானம் நகைச்சுவை நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷிர்த்தா சிவதாஸ் நடிக்கிறார். கதைப்படி, இவர் பேய் வேடம் ஏற்றுள்ளார். மலையாள பட உலகில் நகைச்சுவையில் கலக்கிவரும் அய்யப்பா பைஜு, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சபீர் இசையமைக்கிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம், இது. முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் இரண்டு மடங்கு நகைச்சுவையுடன் தயாராகி வருகிறது.
சுசீந்திரன் புதிய படத்தின் பெயர் 'கென்னடி கிளப்'
சுசீந்திரன் டைரக்ஷனில், சசிகுமார் - பாரதிராஜா இணைந்து நடிக்கும் படத்துக்கு, 'கென்னடி கிளப்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை உள்பட பல படங்களை டைரக்ட் செய்திருக்கும் சுசீந்திரன் அடுத்து, ஒரு பிரமாண்டமான படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு முக்கியவேடத்தில் டைரக்டர் பாரதிராஜா நடிக்கிறார்.
இது, பெண்கள் கபடி விளையாட்டை பற்றிய படம். பயிற்சியாளராக சசிகுமார் நடித்து வருகிறார். கபடி வீராங்கனைகளாக காயத்ரி, மீனாட்சி, சிந்து ஆகிய 3 பேரும் நடித்திருக்கிறார்கள். சுசீந்திரன் இயக்க, தாய் சரவணன் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பை இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஐந்து மொழிகளில் வெளிவரும் கே.ஜி.எப்
உண்மை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி, 'கே.ஜி.எப்' என்ற பெயரில், ஒரு கன்னட படம் உருவாக்கியிருக்கிறது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர இருக்கிறது. இதில் யாஷ் கதாநாயகனாகவும், ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மாளவிகா அவினாஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த பட நிறுவனம் சார்பில் தமிழில் வெளியிடுகிறார் இதுபற்றி அவர் கூறியதாவது:-
'கே.ஜி.எப்' படத்தின் மூலம் கன்னட சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இது போன்ற படங்களில் நானும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் படத்தை வாங்கி வெளியிடுகிறேன்.
1951-ல் நடந்த இந்த கதை தங்கத்தை கண்டுபிடிப்பதை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது. மும்பையில் வளரும் யாஷ், தங்க சுரங்கத்துக்குள் சென்று அங்கு அடிமையாக இருக்கும் மக்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரசாந்த் நீல் டைரக்ட் செய்திருக்கிறார்.
'பாகுபலி' படத்தைப் போல் 'கே.ஜி.எப்' படமும் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கும். படம், அடுத்த மாதம் திரைக்கு வரும்.
நடிகர் நரேன் தயாரிப்பாளர் ஆனார்!
மிஷ்கின் டைரக்டு செய்த ‘ சித்திரம் பேசுதடி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர், நரேன். தொடர்ந்து, ‘ அஞ்சாதே,’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இப்போது, சில மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர், முதன்முதலாக ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு, ‘ கண் இமைக்கும் நேரத்தில்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
கன்னடத்தில், ‘ வாசு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன் , இந்த படத்தை டைரக்டு செய்கிறார். இவருடன் இணைந்து நரேன் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிறது.
நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, அதிரடி திகில் படமாக இது உருவாகிறது .
காதல் தேவதையாக திரிஷா!
தமிழ் திரையுலக ‘ கனவு கன்னி’களில் ஒருவராக இருந்து வரும் த்ரிஷா, ‘ விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில், ‘ ஜெஸ்ஸி’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த காதல் தேவதை ஆனார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘96’ படத்தில் ‘ஜானு’ என்ற கதாபாத்திரல் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
19 வருடங்களாக கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா, இன்னும் 10 வருடங்கள் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும், காதல் தேவதையாகவும் நிலைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்! அதற்கு பொருந்துகிற மாதிரி கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்க போகிறாராம்!
குழந்தை நட்சத்திரமாக இருந்து…!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக உயர்ந்தவர்களின் கீர்த்தி சுரேசும் ஒருவர். இவர், ‘ பைலட்ஸ்’ என்ற மலையாள படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ‘ இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த உலகில், ஒரு கோடி ரூபாயை தாண்டி சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில், கீர்த்தி சுரேசும் ஒருவர்!
நீடித்து நிலைத்து நிற்க முயற்சி!
தமிழ் பட உலகில், இன்னும் சில வருடங்கள் கதாநாயகியாக நீடித்து நிலைத்து
நிற்க விரும்புவர்களில் தமன்னாவும் ஒருவர். அதற்காக, “இன்னும் கவர்ச்சியாக
நடிக்கவும் தயார்...கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவும்
தயார்” என்கிறார், தமன்னா!
‘மார்க்கெட்’டை தக்கவைத்துக்கொள்ள தமன்னா தீவிர முயற்சிகளை
மேற்கொண்டு வருகிறார்!
சினிமா செய்திகள் இந்த வாரம்
Reviewed by Unknown
on
23:07
Rating:
No comments: